‘வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்’ காதலன் தூக்கிட்டு சாவு: காதலி தற்கொலை முயற்சி: திருச்சியில் பரபரப்பு

முசிறி: திருச்சியில் உறவினர் வீட்டுக்கு வந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கையில் பிளேடால் கிழித்துகொண்டு காதலி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு சண்முகா நகரை சேர்ந்தவர் வினிஸ்(28). மதுரை மாவட்டம் பொன்மேனி பைபாஸ் சாலையில் உள்ள ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் நிவேதா(25). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் இந்திராநகரில் உள்ள காதலன் வினிஸின் உறவினரான சங்கரன் வீட்டுக்கு இருவரும் வந்தனர். அங்கு இரவு சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள அறையில் இருவரும் தங்கியுள்ளனர். நேற்று காலை அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வினிஸ் போர்வையால் தூக்கில் தொங்கினார். மேலும் அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன.

நிவேதா கைகளில் பிளேடால்  கிழித்துக்கொண்டு ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நிவேதாவை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், காதலர் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இதனால் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்று கருதி அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களா அல்லது காதலர்களிடையே இரவு தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் காதலி பிளேடால் கையில் கிழித்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததால், அதிர்ச்சியில் வினிஸ் தற்கொலை செய்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நிவேதாவிடம் விசாரித்த பின்னர் தான் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: