ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் கோர உரிமை இல்லை: ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

சென்னை: கல்வியாண்டிற்கு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றி கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மறுநியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட தனிநீதிபதி கல்வியாண்டு முடியும் வரை மறுநியமனம் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல்முறையிட்டு வழக்கை நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது சமந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவை தேவையில்லை என்பதால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து பிறப்பித்த அரசாணை எதிர்த்த வழக்கு தொடராத நிலையில் மறுநியமனம் மறுத்த உத்தரவை ரத்து செய்யமுடியாது என்றும் வாதிடப்பட்டது. அதே சமயம் கல்வியாண்டு மத்தியில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் மாணவர்கள் நலம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறுநியமனம் வழங்குவது தொடர்பாக 2018- ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உபரி ஆசிரியர்கள் இருந்தால் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்க முடியாதென தெரிவித்துள்ளதாக கூறி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறுநியமனம் வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டன. உபரி ஆசிரியர்கள் உள்ள நிலையில் கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர எந்த உரிமையும் இல்லை என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.     

Related Stories: