17ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு-சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அஞ்சலி

புதுச்சேரி : தமிழகம், புதுவையில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிச.26ம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் நேற்று 17ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம் சுனாமியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் சுனாமி பேனருக்கு மலர்வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

 பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்பி ஆகியோர் கடற்கரை சாலையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் எதிரில் செய்யப்பட்டிருந்த சுனாமி மணல் சிற்பம் மற்றும் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் அசோக் பாபு எம்எல்ஏ, தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, துணை தலைவர் தேவதாஸ் ஆகியோர் காந்தி சிலை பின்புறம் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி  கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் சோனாம்பாளையம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட சுனாமி பேனருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை டூபௌக்ஸ் சிலையருகில் சுனாமியின் போது உயிர் இழந்தவர்களுக்கு கடலில் பாலூற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முத்தியால்பேட்டை அதிமுக சார்பில் கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரிமணிகண்டன் தலைமையில் சோலை நகர் வடக்கு மற்றும் தெற்கு மீனவ கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், பனித்திட்டு, நரம்பை, மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் உட்பட பல்வேறு மீனவ பஞ்சாயத்து மற்றும் மீனவ அமைப்புகள் சார்பிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி நினைவுதினத்தையொட்டி புதுச்சேரியில் மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Related Stories: