×

ஆரணி அடுத்த பெரியஅய்யம்பாளையத்தில் கி.பி. 14ம் நூற்றாண்டு சமண படுக்கைகள் கண்டெடுப்பு

ஆரணி : ஆரணி அடுத்த பெரியஅய்யம்பாளையத்தில் கி.பி. 14ம் நூற்றாண்டு சமண படுக்கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த  பெரியஅய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள சிறிய மலை மீது `ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர்’ என்ற பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகே தெற்கு திசையில் `சாமியார் மலை’ என்று அழைக்கப்படும் ஒரு பாறையும், அதன் கீழே ஒரு குகையும் உள்ளது.

இதனை சம்புவராயர்  ஆய்வு மைய முனைவர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் ஆகியோர் நேற்று  களஆய்வு செய்தனர். அப்போது, அந்த குகையில் 3 சமண கற்பாழிகள் இருப்பதையும், குகைக்கு மேலுள்ள பாறை மீது 3 சமண கற்பாழிகள்  வெட்டப்பட்டு இருப்பதையும் உறுதி செய்தனர்.

பின்னர், அவர்கள் கூறியுள்ளதாவது:

பெரியஅய்யம்பாளையம் மலை கோயிலின் மேலுள்ள  மூலவரின் அறைக்கு தெற்கில் இரண்டு பெரிய பாறைகளின் நடுவில் சமணக்குகை அமைந்துள்ளது.  குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் போன்ற தோற்றத்தை தருகிறது. நீளமான கருங்கல் சுவரும், 4 அடி உயரம் கொண்ட சிறிய வாயிலும் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளது.வாயிலின் உள்ளே சென்றால் ஒரு பம்பரத்தின் அடியைபோல் கீழ்புறம் குறுகலாகவும், மேற்புறம் அகன்றும் உள்ள பெரிய பாறை இருப்பதை பார்க்கலாம். அதன் தரைப்பரப்பில் வடக்கு நோக்கியவாறு 3 சமண படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த படுக்கைகள் சற்று ஆழமில்லாமல்  செதுக்கப்பட்ட நிலையே அதன் பழமையை வெளிப்படுத்துகிறது.

குகையின் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள சுவரின் கனப்பரிமாணமும், அதன் வாயிலின் வெளிப்பகுதியில் காணப்படும் 2 அனுமன்  மற்றும் கருடாழ்வார் சிற்பங்களும், அதன் அருகில் தெளிவின்றி, தொடர்ச்சியற்று காணப்படும் கல்வெட்டுகளையும் வைத்து பார்க்கும்போது, இந்த சுற்றுச்சுவரானது கி.பி. 16ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கருத முடிகிறது. ஆனால், குகையின் உள்ளே வெட்டப்பட்டுள்ள  சமணப்படுக்கைகள் கி.பி. 14ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருத முடிகிறது.  

சமணக்குகையின் வெளிப்புறமாக தரைத்தளத்தில்  உள்ள பாறையில் மருந்து அரைக்கும் குழி ஒன்றும் உள்ளது. இக்குகையின் மேல்தளமாக உள்ள பாறை மீது 3 கற்படுக்கைகள் உள்ளன. இவை மெலிதான செதுக்கல்களை கொண்டுள்ளன.  மொத்தமாக அய்யம்பாளையம் சமணர் குகையில் 6 படுக்கைகள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது  கண்டுபிடிக்கப்பட்ட சமணப்பாழியுடன் சேர்த்து மொத்தம் 12  சமணப்பாழிகள்  உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் பெருமளவு சமணர் அடையாளங்கள் உள்ளன என்பது ஒரு சிறப்பாகும்.

அக்காலத்தில் சமணத்துறவிகளை மன்னர்கள் மதித்து வந்துள்ளதை அய்யம்பாளையம் போன்ற  ஒரு சில பாழிகளின் மூலமாக உறுதி செய்ய முடிகிறது. சிறப்பு வாய்ந்த சமணக்குகையின் கட்டிட சுவர்கள் தற்போது சிதைந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இவற்றை சீரமைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Ari ,Periyayambalayam ,BC , Arani: Arani was born in the next Periyayyampalayam in AD. 14th century Jain beds have been found in Thiruvannamalai
× RELATED மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை