×

ஆண்டிபட்டி பகுதி நெசவாளர்கள் குமுறல் நிதியின்றி முடங்கிய நெசவுப்பூங்கா

* நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசு

* பல்லாயிரம் பேருக்கு வேலை தரும் திட்டம்

ஆண்டிபட்டி : பல்லாயிரம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வைகை உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி, விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் முழுநேர தொழிலாக நெசவில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறிக் கூடங்கள் மற்றும் வீடுகளிலும் தறி அமைத்து, வேட்டி, சேலைகளை தயாரித்து வருகின்றனர். தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கும், பள்ளிச் சீருடைகள் திட்டத்திற்கும் சேலை, வேட்டி, சீருடைகள் கைத்தறியில் நெய்து கொடுக்கப்படுகிறது. விசைத்தறி மூலம் பல்வேறு உயர்ரக காட்டன் சேலைகளும் தயாரிக்கப்படுகின்றன.

105 கோடியில் தொழில்நுட்ப நெசவு திட்டம்:
இப்பகுதி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, கடந்த 2004ல் டி.சுப்புலாபுரம் விலக்கில், தேனி - மதுரை சாலையில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த திட்டத்திற்கு வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா என பெயரிடப்பட்டது.

இதற்கு ஒன்றிய அரசு 40 சதவீதம், மாநில அரசு 9 சதவீதம் நிதி வழங்குவது எனவும், பாக்கியுள்ள 51 சதவீத தொகையை நெசவுப் பூங்காவின் பங்குதாரர்கள் வங்கிகளின் உதவியுடன் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாநில அரசின் பங்களிப்பான ரூ.4 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் பங்களிப்பான 40 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதை செயல்படுத்த பங்குதாரர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் முன்னேற்றம் இல்லை.

இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், ‘‘டி.சுப்புலாபுரம் நெசவுப் பூங்காவை சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய அமைச்சர்களும், அப்போதைய அதிமுக அமைச்சர்களும் பார்வையிட்டு சென்றனர். அப்போது திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்’’ என்கின்றனர்.

இந்த திட்டம் குறித்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் கேட்டபோது, ‘‘10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வைகை உயர் தெழில்நுட்ப நெசவுப்பூங்கா திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்த திட்டத்தையும் விரைந்து முடித்து, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Andipatti , Andipatti: Union government funding for the Vaigai Hi-Tech Weaving Park project, which will provide employment to tens of thousands of weavers.
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி