திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்!: ஒருவர் போலீசில் சரண்..கொதித்தெழும் பெரியாரிய உணர்வாளர்கள்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொன்னேரி பேருந்து நிலையத்தின் எதிரே நிறுவப்பட்டிருக்கும் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக கூறி அதிகாலையில் பொன்னேரி காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் கூறி இருக்கிறார். சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்த நிலையில், உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிலையை துணியால் மூடி மறைத்தனர்.

இதனை அறிந்த பெரியாரிய உணர்வாளர்கள் அங்கு திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பேருந்து நிலையம் அருகே நேற்று பாஜக பயிற்சி கூட்டம் நடந்த நிலையில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். சிலை சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்று நடைபெறாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக சரணடைந்துள்ள செல்லக்கிளி என்பவரிடம் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை கொண்டும் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: