வேடங்கள் அணிந்து கதையாடல் மூலம் தாமிரபரணி படித்துறை, கல் மண்டபங்களை பாதுகாக்க விழிப்புணர்வு: சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!!

நெல்லை: திருநெல்வேலியின் பாரம்பரிய அடையாளமான தாமிரபரணி படித்துறை மற்றும் கல் மண்டபங்களை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற படித்துறை கதையாடல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தாமிரபரணி நதிக்கரையில் நீண்ட படித்துறை, குறுக்கு துறை கல்மண்டபத்தில் குழந்தைகளுக்கான கதையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலை பண்பாட்டு மன்றம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி மதியழகன் வேடங்கள் அணிந்து குழந்தைகளை குதூகலப்படுத்தினார். சிறுவர்களுக்கு, நீர்நிலைகளை எவ்வாறு பாதுகாப்பது என்றும், படித்துறையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இதைவிட நீண்ட படித்துறை வேறு இல்லை, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் கதையாடல் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார். திருநெல்வேலி படித்துறை பல்வேறு திரைப்படங்களில் காணப்பட்டாலும் அதன் இயற்கை அழகை உள்ளூரில் உள்ள குழந்தைகள் ரசிக்க வேண்டும், படித்துறைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தாமிரபரணி படித்துறை கல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்தனர்.

Related Stories: