நெல்லுக்கு வழங்கும் ஆதாரவிலையின் அடிப்படையில் கோயில் நிலங்களுக்கான குத்தகை தொகை வசூல்: அறநிலையத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் நிர்ணயிக்கப்படும்  நெல்லுக்கான ஆதாரவிலையின் அடிப்படையில் கோயில் நிலங்களுக்கான குத்தகை தொகை வசூல் செய்ய வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நன்செய் மற்றும் புன்செய் போன்ற இனங்களில் குத்தகை பாக்கி பல ஆண்டுகளாக வசூல்  செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. அதற்கான காரணம் கோரும்போது, அவை உழவடை செய்யும் குத்தகைதாரர்களிடமிருந்து வர வேண்டிய பாக்கி தொகை எனவும், இந்த பாக்கிக்கு அவர்கள் செலுத்த வேண்டிய தானிய வகைகள் செலுத்தப்படவில்லை.

நிலக் குத்தகைதாரர் என வகைபாடு செய்யப்பட்ட இனங்களில் வரவேண்டிய நிலுவைத் தொகை தானியமாக தான் பெறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய தேதியில் பெரும்பாலான இடங்களில் கோயில் சார்பாக தானிய குத்தகை பல வருடங்களாக வசூல் செய்யப்படுவதில்லை. ஆனால் அதற்கான பாக்கி வசூல் செய்யும்போது ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக, ஒரே சீரான நடைமுறை பின்பற்றாமல் பழைய ஆண்டுக்குரிய ஆதார விலையினை எடுத்துக் கொண்டு வெவ்வேறு முறையில் நிர்ணயம் செய்து நிலுவை தொகையை கணக்கிடுகின்றனர். தானியமாக குத்தகையை செலுத்த தவறிய குத்தகைதாரர்கள் நிலுவை தொகையினை செலுத்த முன்வரும்போது அதனை செலுத்திட பழைய ஆண்டுக்கான ஆதாரவிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு அதனடிப்படையில் நிலுவை குத்தகை தொகையை அறநிறுவனங்கள் கணக்கிடும்போது, இதனால் அறநிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசால், தானியத்திற்கான ஆதாரவிலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2038 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் தானிய குத்தகை செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ள இனங்களில், தானியத்திற்கு பதில் ரொக்கமாக செலுத்த விரும்பினால் குத்தகைதாரர்களிடமிருந்து அந்தந்த ஆண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தானிய ஆதாரவிலையினை அடிப்படையாகக் கொண்டு தானிய குத்தகைக்கான ரொக்கத் தொகையினை அறநிறுவனங்கள் முடிவு செய்து பாக்கி தொகையை வசூல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: