தாமிரபரணி, காவிரி, பாலாறு உட்பட 17 ஆற்றுப்படுகைகளில் 49 இடங்களில் வெள்ள நீர் அளவீடு செய்யும் கருவி பொருத்தப்படும்: வெள்ள ஆபத்தை முன்கூட்டியே அறியலாம்

சென்னை: தாமிரபரணி, காவிரி, வைகை, பாலாறு உட்பட 17 ஆற்றுப்படுகைகளில் 49 இடங்களில் வெள்ள நீர் அளவீடு செய்யும் கருவி பொருத்தப்படுகிறது. இதன் மூலம், தமிழக அரசு மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பது மட்டுமின்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி, நம்பியாறு, கோதையாறு, வெள்ளாறு, பெண்ணையாறு, பரம்பிகுளம் ஆழியார் உட்பட 17 ஆற்றுப்படுகைகள் உள்ளது. இவற்றில் வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது வழக்கம்.

அவ்வாறு ஓடும் நீரின் அளவை தெரிந்து கொள்ள பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதை வைத்து தான் ஆற்றுப்படுகைகளில் மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விடுக்கப்படுகிறது. இந்த நடைமுறையால், கடந்த 2015ல் அடையாற்றில் ஒரே நேரத்தில் 1 லட்சம் கன அடி நீர் சென்றது. இந்த விவரங்கள் முழுமையாக தெரியாத காரணத்தால் தான் அடையாற்றின் கரை உடைந்து வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்தது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அடையாறு, கூவத்தில் வெள்ள நீர் அளவீடு செய்யும் கருவி பொருத்தப்பட்டது. இதனால், மழைக்காலங்களில் அடையாறு, கூவத்தில் எவ்வளவு நீர் செல்கிறது என்பதை ெதரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதே போன்று பாலாறு வைகை, தாமிரபரணி, காவிரி உட்பட 49 இடங்களில் தானியங்கி மேற்பரப்பு நீர் அளவு பதிவு செய்யும் கருவி பொருத்தப்படுகிறது. இந்த கருவி வைப்பதன் மூலம் ஆற்றுப்படுகைளில் ஓடும் வெள்ள நீரின் அளவை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். தற்போது வெள்ள நீரினை அளவீடு செய்யும் கருவியை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன், விரைவில் மாநிலம் முழுவதும் 49 இடங்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் பொருத்தப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நீர்வளத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 49 இடங்களில் கருவி வைக்கப்படுகிறது. இந்த கருவி மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெள்ள நீரின் அளவை கண்காணிக்க முடியும். இதன் மூலம், தமிழக அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்களை தரலாம். மேலும் எவ்வளவு நீர் வீணாகிறது என்பதை அறிய முடியும்’ என்றார்.

Related Stories: