சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஏப்ரல் முதல் கிருஷ்ணா நீர்: தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம்

சென்னை:சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வரும் ஏப்ரல் முதல் கிருஷ்ணா நீர் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நீர் ஆந்திராவிடம் இருந்து பெறப்படுகிறது. குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். இந்த நிலையில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க கோரி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதையேற்று,கடந்த ஜூன் 14ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 152 கி.மீ பயணித்து ஜூன் 16ம் தேதி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தது. இந்த காலகட்டத்தில் 4 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று 4.4 டிஎம்சி வரை ஆந்திர அரசு தந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.  

இந்த நிலையில் தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி முதல் தவணை காலத்தில் 8 டிஎம்சியில் 4 டிஎம்சி மட்டுமே தந்துள்ள நிலையில், தற்போது அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. எனவே, தண்ணீர் தந்தாலும் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆந்திர அரசு தண்ணீர் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: