×

ஒமிக்ரான் பாதிப்பை தடுக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்:சென்னை மாநகராட்சி வெளியிட்டது

சென்னை: ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகளை ெவளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்லூரிகளில்  மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்யவும், வகுப்பறைகளுக்கு  வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியை  கடைப்பிடிப்பதையும் கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதைப்போன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், கூட்டம் சேரும் வகையில் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை.

மேலும் தினசரி கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை அளிக்க வேண்டும். ஒரே தட்டை பலர் பேர் உபயோகிக்கும் போது தொற்று எளிதில் பரவுவதற்கான அபாயம் உள்ளது. எனவே அதனை தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது. குறிப்பாக அனைவரும் சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா. முகக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும். கல்லூரிகள் தடுப்பூசி முகாமை நடத்த விரும்பினால் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம். ஒமிக்ரான் தொற்று பரவலை  கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து கல்லூரிகளுக்கு சென்னை  மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.



Tags : Chennai Corporation , Omigron, College Student, Ethics, Corporation of Chennai
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...