×

ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழகம் வந்தது ஒன்றிய குழு: ஐந்து நாட்கள் கண்காணிக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் சூழலை கண்காணிக்க 4 பேர் கொண்ட ஒன்றிய அரசின் நிபுணர் குழு நேற்று  இரவு தமிழகம் வந்தது. இக்குழுவினர் 5 நாட்கள் தங்கி இருந்து தமிழக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு வசதிகள், கொரோனா வார்டுகள், ஒமிக்ரான் நோயாளிகளுக்கான சிறப்பு வார்டுகள், ஆக்சிஜன் வசதி, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளது. தொடர்ந்து அந்த குழு தமிழக அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் வைரசின் பரவும் தன்மை அதி வேகமாக இருப்பதால் பல நாடுகளும் அச்சம் அடைந்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் மற்றும் அதன் பாதிப்பு குறித்து பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் இதுவரையில் 415க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில்  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, அரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், சண்டிகர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 42 பேரின் பரிசோதனை முடிவுகள் ஒன்றிய அரசின் வைராலஜி துறையில் இருந்து வரவேண்டியுள்ளது. இந்தநிலையில், ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சமீபத்தில் பிரதமர் மோடி  ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஒமிக்ரான் பாதிப்பு காணப்படும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் குழுக்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி, தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. அந்த குழு ஒமிக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி, தமிழகத்திற்கான குழுவில் ஒன்றிய சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் டாக்டர் புர்பசா, டாக்டர் வினிதா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. இந்த குழு  5 நாட்கள் தங்கியிருந்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஒமிக்ரான் பாதித்ேதார் சிகிச்சை பெற சிறப்பு வார்டு, மருத்துவ வசதி, ஆக்சிஜன் வசதிகள், ஆய்வக வசதிகள் குறித்து ஆய்வு செய்து  அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது. குறிப்பாக, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள  அரசு மருத்துவமனைகளை இக்குழு நேரில் சென்று பார்வையிடும். மேலும், மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இக்குழு ஒமிக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த, என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவினர், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் கேட்டறியும். தொடர்ந்து அந்த குழு மாநில அரசு பரிந்துரைக்கும் கோரிக்களை ஒன்றிய அரசின் சுகாதாரத்துறைக்கு அறிக்கையாக தயாரித்து அனுப்பும். அதன் பிறகு, மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்றாற் போல் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Tamil Nadu Union Committee , Omigron, Prevention, Tamil Nadu, Union Committee,
× RELATED ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை...