இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்தது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு சொந்தமாக மிகப்பெரிய பண்ணை வீடு இருக்கிறது.  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சல்மான்கானின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை அவரது குடும்பத்தினர்  இந்த பண்ணை வீட்டில் வைத்து உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை பன்வேல் பண்ணை இல்லத்தில் அவர்கள் கொண்டாடினார்கள். அப்போது நள்ளிரவு 3 மணிக்கு சல்மான்கானை பாம்பு ஒன்று கடித்தது. உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு விஷமுறிவு மருந்து கொடுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து சல்மான்கான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை கடித்த பாம்பு விஷத்தன்மை இல்லாதது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அதிக விஷம் கொண்ட பாம்பு கடித்திருந்தால் நிலைமை விபரீதமாகி இருக்கும். நல்லவேளையாக சல்மான்கான் உயிர் தப்பினார் என்று அவரது ரசிகர்களும், உறவினர்களும் கூறினர். இதுகுறித்து சல்மான்கான் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று சல்மான்கான் தனது 56வது பிறந்தநாள் விழா கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

Related Stories: