×

காட்பாடி அருகே பொன்னையாற்றில் ரயில்வே பாலத்தின் விரிசல் சீரமைப்பு பணிகள் முடிந்தது: குறைந்த வேகத்தில் ரயில்களை அனுமதிக்க முடிவு

திருவலம்: வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் பொன்னையாற்றில் உள்ள 2 ரயில்வே மேம்பாலங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தின் 38, 39வது தூண்களுக்கு இடையே பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கடந்த 23ம் தேதி மாலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தூண்களிலும் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து அன்று மாலை முதல் அவ்வழியாக வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இரு தூண்களின் அடிப்பகுதியிலும் கான்கிரீட் தளம் அமைத்தனர்.

தொடர்ந்து, அதிகாரிகள் நேற்று முன்தினம் மதியம் மேம்பாலத்தின் மற்ற தூண்களை ஆய்வு செய்தனர். அப்போது, 21, 22வது தூண்களுக்கு இடையிலும், 27, 28வது தூண்களுக்கு இடையிலும் பாலங்களின் அடியில் வெள்ளம் காரணமாக 10 அடிக்கும் மேலாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண் அரிப்பை சீரமைக்கும் பணி நடந்தது. இதில் தூண்களின் இருபக்கமும் அதிகளவிலான பாறைக்கற்கள், மணல் அடுக்கி வைத்து பள்ளம் சமன்படுத்தப்பட்டது. பின்னர் விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட 38,39வது தூண்களுக்கு இடையில் இரும்பு கர்டர்கள்  வைத்து சீரமைக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், பெட்டிகள் இல்லாமல் ரயில் இன்ஜின் மட்டும் நேற்றிரவு தண்டவாளத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சரக்குகள் ஏற்பட்ட ஒரு சரக்கு ரயிலை இயக்கி சோதனை என்று மேற்கொண்டு படிபடியாக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாலத்தின் உறுதித்தன்மை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், இந்த பாலத்தில் மட்டும் சிறிது நாட்கள் வரை ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ponnayar ,Katpadi , Reconstruction work of the railway bridge at Ponnayar near Katpadi has been completed: Decision to allow low speed trains
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!!