×

தரை இறக்க, பார்க்கிங் செய்ய கட்டணம் 4 விமான நிறுவனங்களின் பாக்கி 2 மடங்கு அதிகரிப்பு: ஏர் இந்தியா மட்டுமே ரூ.2,362 கோடி நிலுவை

புதுடெல்லி: கடந்த 10 மாதத்தில் இந்திய விமான போக்குவரத்து ஆணையரகத்திற்கு 4 முக்கிய விமான நிறுவனங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை 2 மடங்காக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, விமானங்களை செலுத்துதல், தரை இறக்குதல், நிறுத்தி வைத்தால் போன்ற பல்வேறு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள, விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதற்கு செலுத்த வேண்டும். கொரோனா காரணமாக விமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதத்தில் 4 விமான நிறுவனங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை 2 மடங்காக அதிகரித்துள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (ஏஏஐ) புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர், ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய 6 விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவையை வழங்குகின்றன. இவை செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகையாக 2,636.34 உள்ளது. இதில், கடந்த 10 மாதத்தில் ஏர் இந்தியாவின் மொத்த நிலுவைத் தொகை மட்டுமே ரூ.2,183.71 கோடியில் இருந்து ரூ.2,362.36 கோடியாக அதிகரித்துள்து. அதாவது, 14.29 சதவீதம் அதிகரித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் தர வேண்டிய நிலுவைத் தொகை கடந்த ஜனவரியில் ரூ.33.21 கோடியாக இருந்த நிலையில் அக்டோபரில் ரூ.80.69 கோடியாக அதிகரித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிலுவைத் தொகை ரூ.69.93 கோடியில் இருந்து ரூ.146.75 கோடியாகவும், கோஏர் நிலுவைத் தொகை ரூ.15.62 கோடியில் இருந்து ரூ.39.06 கோடியாகவும், ஏர் ஏசியாவின் நிலுவைத் தொகை ரூ.1.47 கோடியில் இருந்து ரூ.3.58 கோடியாகவும் விஸ்தாராவின் நிலுவைத் தொகை ரூ.2.65 கோடியில் இருந்து ரூ.3.9 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக ஏஏஐ கூறி உள்ளது. இதில், விஸ்தாரா, இண்டிகோ நிறுவனங்கள் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி விட்டதாக கூறி உள்ளன. மற்ற நிறுவனங்களும் உரிய காலத்தில் நிலுவைத் தொகை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளன. அதே சமயம், கொரோனா காலத்தில் மற்ற நாடுகளைப் போல ஒன்றிய அரசு எந்த நிவாரணமும், கட்டண சலுகையும் வழங்கவில்லை என விமான நிறுவனங்கள் கூறி உள்ளன.

Tags : Airline , Air India alone owes Rs 2,362 crore
× RELATED முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர்...