ஜப்பானில் ‘ஒரே கல்; 2 மாங்காய்’ வாகனம் சாலையில் மட்டும் அல்ல தண்டவாளத்திலும் ஓடும்

டோக்கியோ: உலகிலேயே முதல் முறையாக சாலையிலும், ரயில் தண்டவாளத்திலும் இயங்கக்கூடிய இரட்டை பயன்பாட்டு வாகனத்தை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானின் கையோ நகரில் இரட்டை பயன்பாடு வாகனம் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக சாலையிலும், ரயில் தண்டவாளங்களிலும் இயங்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மினி பேருந்து போன்று தோற்றமளிக்கிறது. இதில் 21 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க முடியும். தண்டவாளங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் இயங்கக் கூடியது. டீசலில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

சாலைகளில் இயங்கும்போது சாதாரண ரப்பர் டயர்களில் இந்த மினி பேருந்து இயங்கும். தண்டவாளங்களில் செல்லும்போது டயர்கள் மேலே சென்று இரும்பு சக்கரங்கள் கீழ் இறங்கி தண்டவாளத்தில் பயணிக்கும். குறைந்த மக்கள் தொகை கொண்ட கையோ போன்ற நகரங்களில் இந்த இரட்டை பயன்பாட்டு வாகனம் பயன்படுத்தப்படும். இது பொதுமக்களுக்கு பேருந்தாகவும், ரயிலாகவும் பயன்படும். ஷிகோகு தீவின் கடற்கரை பகுதியில் இயக்கப்படும் இந்த மினி பேருந்து பல்வேறு சிறிய நகரங்களை இணைக்கிறது.. இதன் மூலம் கடலோர காட்சிகளை மக்கள் கண்டு களிப்பதோடு, சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: