×

தென் ஆப்ரிக்காவில் நோபல் பரிசு வென்ற டெஸ்மண்ட் மறைவு: மோடி இரங்கல்

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், இனவெறிக்கு எதிராக போராடியவருமான ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுடு காலமானார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் டெஸ்மண்ட் டுடு, இவர் இனவெறிக்கு எதிராகவும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைகளுக்காகவும் அமைதியான முறையில் போராடினார். இதனால், இவருக்கு கடந்த 1984ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கேப் நகரின் ஆர்ச் பிஷப்பான இவர், வயது மூப்பு மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 90. இவர். ஜோகன்ஸ்பர்க்கின் முதல் கருப்பின பிஷப் மற்றும் கேப் டவுன் நகர ஆர்ச் பிஷப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன சமத்துவமின்மைக்கு எதிராக உள்நாடு மற்றும் உலகளவில் போராட்டங்களை நடத்தி பொதுமக்களால் அறியப்பட்டவர்.

இந்நிலையில், டுடு காலமானதாக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா நேற்று அறிவித்துள்ளார்.  டுடு மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுடு உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காக திகழ்ந்தவர். மனித கவுரவம் மற்றும் சமத்துவத்துக்கான அவரது உறுதிபாடு, என்றென்றும் நினைவு கூரத்தக்கது. அவரது மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Desmond ,South Africa ,Modi , Nobel laureate Desmond dies in South Africa: Modi mourns
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...