×

உதய அஸ்தமன தரிசனத்துக்கு ரூ.1.50 கோடியில் டிக்கெட் ஏன்? திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருமலை: திருப்பதியில் ரூ.1.50 கோடியில் உதய அஸ்தமன தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படுவது குறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1982ம் ஆண்டு உதய அஸ்தமன சேவையை  தொடங்கியது. அதற்கு, அப்போைதய பணமதிப்பின்படி முதலில் ரூ.10 ஆயிரமும், பிறகு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் அரை கட்டண தொகை அளிப்பவர்களுக்கு அதிகாலை முதல் மாலை வரை ஏழுமலையானுக்கு நடைபெறும் சேவைகளை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தனிநபரின் பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர் மீது 20 ஆண்டுகளுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆண்டிற்கு ஒருமுறை ஏழுமலையானின் சேவைகளை தரிசிக்கலாம். சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கும் சுப்ரபாதம் சேவை முதல் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு  நடக்கும் ஏகாந்த சேவை வரை நடக்கும் சேவைகளை காண உதயாஸ்தமன சேவை என பெயரிட்டது. அப்போது, இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பலர் இந்த டிக்கெட்டுகளை பெற போட்டியிட்டனர். அதனால், 20 ஆண்டுகளுக்கு இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. பிறகு தேவஸ்தானம் இந்த டிக்கெட்டுகள் வழங்குவதை நிறுத்தியது.

இச்சேவையில் 2,961 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அவற்றில் 2,430 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். மற்றவர்கள் பலர் இறந்து விட்டதாலும், பல நிறுவனங்களின் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததாலும் 531 டிக்கெட்டுகள் காலியானது. அதில் சனி, ஞாயிறுகளில் 38, வெள்ளிக்கிழமை 28, செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் 465 டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. இந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தற்போது ரூ.500 கோடியில் கட்டி வரும் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதை சமூக வளைதளங்களில் பலர் வெவ்வேறு விதமாக  சித்தரிக்கின்றனர். மேலும், மடாதிபதி மற்றும் பீடாதிபதிகள் தேவஸ்தானம் உதய அஸ்தமன சேவா டிக்கெட்டை வெள்ளிக்கிழமைகளில் ரூ.1.50 கோடிக்கும், இதர தினங்களில் ரூ.1 கோடிக்கு விற்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேவஸ்தானம் ஆரம்ப காலத்திலிருந்து பல விதிமுறைகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்ப பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, நன்கொடைகள் பல நல்ல திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்களை கவுரவிக்க தேவஸ்தானம் இத்திட்டத்தை வகுத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Udaya ,Asthama ,Darshan , Why the Rs 1.50 crore ticket for Udaya Asthama Darshan? Description of Tirupati Devasthanam
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே