×

பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் மரணம்

சென்னை: பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் (73) மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.ராமய்யா பிள்ளையின் இளைய மகனான அவர், விக்ரம் நடித்த ‘தில்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ள கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி’ என்ற பாடலின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ரோஜாக்கூட்டம், ஜெயம், இயற்கை, தூள், ஒற்றன், பார்த்திபன் கனவு, நியூ, திருப்பாச்சி, சந்திரமுகி, வெயில், பருத்திவீரன், சிங்கம் உள்பட பல படங்களில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

 பாடுவதை தவிர குணச்சித்திர வேடத்தில் திருடா திருடி, யுத்தம் செய், பேரழகன், கள்வனின் காதலி, போஸ், திமிரு, கிரி, பலே பாண்டியா, வா குவார்ட்டர் கட்டிங், வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாணிக்க விநாயகம், சென்னையிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 6.45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. மாணிக்க விநாயகத்தின் மறைவையொட்டி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* முதல்வர் இரங்கல்
பாடகர் மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக ரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர். அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த வழுவூர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

Tags : Manika Vinayagam , Singer and actor Manika Vinayagam dies of heart attack
× RELATED பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரடைப்பால் மரணம்