×

திரிணாமுல் காங். கட்சியில் சேர்ந்து 3 மாதத்தில் முழுக்கு போட்ட கோவா தலைவர்கள்: மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு

பனாஜி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 3 மாதத்தில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ உட்பட 5 தலைவர்கள் அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இவர்களது அறிவிப்பு மம்தா பானர்ஜிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா முன்னாள் முதல்வர் லூயிசினோ  ஃபலேரோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் சேர்ந்தார். அதனை  தொடர்ந்து அம்மாநிலத்தை சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து  திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்றத்  தேர்தல் நடைபெறவுள்ளதால், மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சி கோவாவில் தனது  தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கோவா வந்த மம்தா  பானர்ஜி, தனது கட்சிக்காக பிரசாரம்  செய்தார். அதற்கு முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ லாவோ மம்லதார் உட்பட உள்ளூர் தலைவர்கள் ராம் மந்த்ரேக்கர், கிஷோர் பர்வார், கோமல் பர்வார், சுஜய் மல்லிக் ஆகியோர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட 5 பேரும் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘கோவா மக்களுக்கு திரிணாமுல் கட்சியால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியில் இணைந்தோம். ஆனால் அக்கட்சியானது கோவா மக்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மத ரீதியாக மக்களை பிரித்து வாக்கு கணக்குகளை போட்டு வருகிறது. திரிணாமுல் கட்சி முற்றிலும் வகுப்புவாத மனதுடன் செயல்படுகிறது.

கோவா மக்களை பிரிக்க முயற்சிக்கும் கட்சியுடன் நாங்கள் தொடர விரும்பவில்லை. மாநிலத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை உடைக்க அனுமதிக்க முடியாது. அதனை நாங்கள் பாதுகாப்போம். திரிணாமுல் கட்சி வகுப்புவாத கட்சி அல்ல என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் (எம்ஜிபி) கூட்டணி அமைத்துள்ளனர். அதனால் வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திரிணாமுல் கட்சியில் இருந்து விலகுகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 3 மாதத்தில், அக்கட்சியில்  இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ உட்பட 5 தலைவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மம்தா பானர்ஜிக்கு  பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags : Trinamool Cong. Goa ,Mamata Banerjee , Trinamool Cong. Goa leaders immersed in 3 months of joining party: A setback for Mamata Banerjee
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்