ரூ3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்: விசாரணை செய்ய எஸ்பி உத்தரவு

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புகார்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டுள்ளார். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு டிச.17ல் தள்ளுபடியானது. தகவலறிந்து அன்றைய தினம் விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜேந்திரபாலாஜி காரில் ஏறி தலைமறைவானார். பெங்களுர், கேரளா, ஆந்திரா, மதுரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் தேடி வருகின்றன.

அதிமுக பிரமுகர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் செல்ேபான் எண்களும் சைபர் கிரைம் போலீசார் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா என குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி ஏற்கனவே 2 மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த தூயமணியின் மனைவி குணா தூயமணி தனது மகனுக்கு ராஜேந்திர பாலாஜி மூலம் ஏபிஆர்ஓ வேலை வாங்கி தர வேண்டி நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, அவரது மனைவி மாலதி ஆகியோரிடம் ரூ.17 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்துள்ளனர் என்று புகார் கூறியுள்ளார்.

மேலும், மதுரை வில்லாபுரம் காமராஜர்புரம் 3வது தெருவை சேர்ந்த நாதன் மகன் மீனாட்சி சுந்தரம் தனக்கு மதுரை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வாங்கி தர கோரி சிவகாசி ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை என புகார் தெரிவித்துள்ளார். அதோடு நெய்வேலி அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர், அவரது நண்பர் தரணிதரன் என்பவருக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக விஜயநல்லதம்பியிடம் ரூ.7.50 லட்சம் கொடுத்தும் வேலை வாங்கி தரவில்லை என்று புகார் கூறியுள்ளார்.

இவர்கள் மூவரும் இணைய தளம் மூலமும், நேரில் சந்தித்தும் விருதுநகர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.  மேலும், மதுரை கோமதிபுரம் தெருவை சேர்ந்த செல்வராஜ், திருவில்லிபுத்தூர் அங்குராஜ் நகரை சேர்ந்த வெங்கடாச்சலம், சாத்தூர் ஹரிபாலு, மம்சாபுரத்தை சேர்ந்த கார்த்திக்குமார் ஆகியோரும் ராஜேந்திர பாலாஜி மீது இதேபோல் மோசடி புகார் கொடுத்துள்ளனர்.

எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

Related Stories: