பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணி தீவிரம்: எஸ்பி ஆய்வு

அலங்காநல்லூர்: தை பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். பொங்கலன்று (ஜன.14) அவனியாபுரம், ஜன.15ம் தேதி பாலமேடு, ஜன.16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  பாலமேடு ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்றுத்திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி பாலமேடு பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் வாடிவாசல், பார்வையாளர் கேலரி, காளைகள் நிற்கும் இடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் பெய்த பருவமழையால் மஞ்சமலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மணல் மேடுகள், குப்பைகள் திடல் பகுதியில் குவிந்துள்ளன. அதனை தூய்மைப்படுத்தும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. மேலும், நடப்பாண்டில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளதால், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாதவண்ணம், நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்களை விழா கமிட்டியினர் வழங்கி வருகின்றனர். இதனால் 2 கிராமங்களும் களை கட்டத் துவங்கி உள்ளது.

காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுரை எஸ்பி பாஸ்கரன் நேற்று வந்தார். ஜல்லிக்கட்டு வாடிவாசல் நடைபெறும் பகுதி, காளைகள் நிறுத்தப்படும் இடம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Related Stories: