சபரிமலையில் மண்டல பூஜை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்திபெற்ற மண்டல பூஜை இன்று (26ம் தேதி) மதியம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கடந்த 22ம் தேதி புறப்பட்டது. நேற்று மாலை 6.15 மணியளவில் இந்த தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடைந்தது. இதன் பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நண்பகல் 12.15 மணியளவில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது.. தொடர்ந்து மாலை 4 மணியளவில் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இன்றுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். இதன் பிறகு 29ம் தேதி வரை 3 நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் 30ம் தேதி முதல் பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: