சுனாமி 17ம் ஆண்டு நினைவு தினம்; மவுன ஊர்வலம், அஞ்சலி: கடலில் பால் ஊற்றி மக்கள் கண்ணீர்

நாகை: நாகை மாவட்டத்தில் சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்தோரின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி 14 நாடுகளில் கடலோர பகுதிக்குள் புகுந்தது. இந்த சுனாமி ஆழிப்பேரலையால் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமியின் கோரதாண்டவம் அரங்கேறியது.

இதில் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 6,060 பேர் இறந்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒவ்வொரு ஆண்டும் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நாகை மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலம், சிறப்பு பூஜைகள், வேள்விகள் நடந்தது. கீச்சாங்குப்பம் கிராமத்தில் சிறப்பு வேள்வி பூஜை மற்றும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் கடற்கரைக்கு சென்று பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் தீபம் ஏற்றி வழிபட்டனர். நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபி முன் கலெக்டர் அருண் தம்புராஜ் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். நாகை பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மறைமலை அடிகளார் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை திமுக சார்பில் மவுன பேரணி  நடந்தது.

நம்பியார் நகரில் உள்ள நினைவு ஸ்தூபியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி விட்டு மவுனமாக பேரணியாக புறப்பட்டு கடற்கரை சென்று உயிர்நீத்த தங்களது உறவினர்களுக்கு திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வேளாங்கண்ணி பேராயலத்தில் இருந்து மவுன பேரணி புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியை வந்தடைந்தது. பின்னர் சுனாமி நினைவு ஸ்தூபி முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமரி

குமரி கடற்கரை கிராமங்களில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.

சுனாமியால் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடியில் 119 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் இன்று காலை நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இறந்து போன குழந்தைகள், உறவுகளை எண்ணி பெண்கள் கதறி அழுதனர். கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 199 பேர் பலியாயினர். பின்னர் புனித அல்லேசியார் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு நினைவு திருப்பலி நடந்தது. ஆலய வளாகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொட்டில்பாடு மீனவர்கள் சுனாமி காலனியிலிருந்து பங்குத்தந்தை ராஜ் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கல்லறை தோட்டம் வரை மவுன ஊர்வலம் வந்தனர். அவர்கள் உறவினர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் புனித அல்லேசியார் ஆலயத்தில் சிறப்பு நினைவு திருப்பலி நடந்தது. இதில் அருட்சகோதரிகள் உள்பட திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் விஜய் வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோரும் கலந்து ெகாண்டு சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை குளச்சலில் பலியான 414 பேர்களின் நினைவாக புனித காணிக்கை அன்னை திருத்தல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கடலூர்

கடலூரில் 17ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றியும், நினைவுத் தூணில் மலர் தூவியும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பொது நல அமைப்புகள் மற்றும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மீனவ அமைப்பினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

Related Stories: