×

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பரிசலில் சென்று உற்சாகம்

பென்னாகரம்: கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். ஆனால் அருவியில் குளிக்க அனுமதி மறுப்பால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. என்றாலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஐந்தருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிப்பதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று மீன் விற்பனை அதிகரித்தது. மசாஜ் தொழிலாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என மீனவர்கள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ochenakal ,Christmas , Tourists congregate in Okanagan for the Christmas holidays: Excitement to visit travelers
× RELATED கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு...