கொடைக்கானலில் விபத்தில் பலியான ஏட்டுவின் உடலை சுமந்து சென்ற எஸ்பி, ஏடிஎஸ்பி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற பாலா (36). கொடைக்கானலில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி நிமித்தம் அப்சர்வேட்டரி பகுதிக்கு டூவீலரில் சென்றார். பணியை முடித்துவிட்டு இரவில் காவல்நிலையம் திரும்பும்போது, அப்சர்வேட்டரி சாலையில் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாலா படுகாயம் அடைந்தார். உடனே அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலசுப்பிரமணியன் இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இறந்த ஏட்டு பாலசுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான நிலக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கின்போது ஏட்டுவின் உடலை, திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன், கூடுதல் எஸ்பி லாவண்யா உள்ளிட்ட போலீசார் மயானத்திற்கு தூக்கிச் சென்று மரியாதை செலுத்தினர். பணியின்போது பாலசுப்பிரமணியன் நேர்மையாக பணியாற்றி பலரது பாராட்டை பெற்றுள்ளார். இதற்கு மரியாதை செலுத்தும்விதமாகவே எஸ்பி, ஏடிஎஸ்பி மற்றும் போலீசார் உடலை சுமந்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இறந்த ஏட்டுக்கு மனைவி, ஒரு பிள்ளை உள்ளனர்.

Related Stories: