×

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளிக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்திய கல்லூரி மாணவர்கள்: பொதுமக்கள் பாராட்டு

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்திய கல்லூரி மாணவர்களை கிராம பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கூவாகம் கிராமத்தில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவாகம் கிராமத்தில் தங்கி தூய்மை பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டு ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கிய மாணவர்கள் அங்குள்ள பள்ளி கட்டிடங்கள் வர்ணங்கள் அழிந்து, பாசி படர்ந்த நிலையில் மிகவும் பொலிவிழந்து காணப்பட்டதை கண்டு வருந்தி, கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி பள்ளியை அழகுப்படுத்தினால் என்ன? என்று அவர்களுக்கு தோன்றியது. இவர்களின் விருப்பத்தை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோடித்துரை ஆகியோர்களுக்கு தெரிவித்தனர். மாணவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்ட ஆசிரியர்களும், பொதுமக்களும், மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான உபகரணங்களை தாமாகவே முன்வந்து செய்து கொடுத்து மாணவர்களை பணியில் ஈடுபட செய்து அழகு பார்த்தனர்.

மாணவர்களும் அதனை உற்சாகமாக ஏற்றுக்கொண்டு, அரசு பள்ளி சுவர்களை நன்கு சுத்தப்படுத்தி, ஆளுக்கு ஒரு குழுவாக சென்று, பள்ளி கட்டடத்திற்கு வர்ணம் பூசி அசத்தினர். இப்படி பல்வேறு அறப்பணிகளை உத்வேகத்துடன், உற்சாகத்துடன் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டதையடுத்து அக்கிராம மக்கள் பாராட்டியதோடு மட்டுமின்றி, தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Tags : Jayankondam , College students paint and beautify government school near Jayankondam: Public praise
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது