×

சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை: சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.12.2021) காலை 10 மணியளவில் திறந்து வைத்து, நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அவரின் நூல்களுக்கான நூலுரிமை தொகையினை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1920ம் ஆண்டு இவர் பிறந்தார். தமிழ்மொழி மீது கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாக, நாராயணசாமி என்கின்ற தனது பெயரினை நெடுஞ்செழியன் என்று மாற்றி கொண்டார். அன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவி வந்த அவலங்களையும், அநியாயங்களையும் தைரியத்தோடு தட்டி கேட்ட பெரியாரின் பால் ஈர்க்கப்பட்டு, 1944ம் ஆண்டு தந்தை பெரியாருடன் திராவிட இயக்கத்தில், இளமை காலத்திலேயே, தன்னுடைய 24ம் வயதில் இணைத்து கொண்டார்.

நாவலர் நெடுஞ்செழியன் மொழி அறிவும், அசாத்திய பேச்சாற்றலும், சமுதாய நலனும், விடாத சுயமரியாதையும், பகுத்தறிவும் கொண்டு, தான் கொண்டிருந்த கொள்கையில், லட்சியத்தில் இறுதிவரையில் உறுதிகாத்து, அயராது மக்கள் பணியாற்றியதன் காரணமாக, பெரியாரிடமும், அண்ணாவிடமும் மிகுந்த நன்மதிப்பினை பெற்றதோடு, மிகவும் குறுகிய காலத்தில் இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, உச்சம் தொட்டார். 1967 முதல் 1969 வரை அண்ணாவின் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975 வரையில் கலைஞர் ஆட்சியிலும் கல்வி அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். பின்னர், அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டு உணவு துறை மற்றும் நிதி துறை அமைச்சராக திறம்பட செயலாற்றினார். தான் வாழ்கின்ற காலம் வரையில், தான் கொண்டிருந்த பகுத்தறிவு கொள்கையை உயிர்போல் காத்து வந்தவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘‘திராவிட இயக்கத்தின் சொல்லோவியம் - நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம்” என அறிவித்திருந்தார். மேலும், கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின் போது நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அன்னாரின் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் திருவுருவ சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Nedunchezhiyan ,Chepauk Guest House ,Chennai , Chief Minister MK Stalin today unveiled the statue of the novelist Nedunchezhiyan at the Chepauk Guest House in Chennai.
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...