விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நெடுஞ்சாலைத்துறையில் புதிதாக சாலை பாதுகாப்பு பிரிவு: இதுவரை 748 விபத்து பகுதிகள் கண்டுபிடிப்பு; எச்சரிக்கை கருவிகள் பொருத்த திட்டம்

சென்னை: விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையில் சாலை பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் விபத்து கரும்புள்ளி பகுதிகள் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 66 ஆயிரம் கி.மீ., நீள சாலைகள் உள்ளது. இதில், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 63 ஆயிரம் கி.மீ., நீள மாநில, மாவட்ட முக்கிய, மாவட்ட இதர சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் 8 முறைக்கு மேல் விபத்து ஏற்படும் பகுதிகள், 500 மீட்டருக்கு இடைவெளியில் அடிக்கடி விபத்து ஏற்படும் கரும்புள்ளி (பிளாக் ஸ்பாட்) பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை 748 பிளாக் ஸ்பாட் பகுதிகள் வரை கண்டறியப்பட்டுள்ளன. இதில், 199 பகுதிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளது. மற்ற பகுதிகள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ளது. இந்த மாதிரியான சாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க, குறுகிய சிறுபாலங்கள், பாலங்கள், ‘எஸ்’ வளைவுகளின் நேர்ப்பாட்டை மாற்றியமைத்தல், மேடான இடங்களில் அமைந்துள்ள சாலைகளில் தடுப்பு சுவர்கள் அமைப்பது, சாலை சந்திப்புகளை மேம்படுத்துவது, குறுக்கு சாலையில் வேகத்தடை அமைப்பது, சாலையோரங்களில் உள்ள திறந்த வெளி கிணறுகளுக்கு தடுப்பு சுவர், சாலைகளில் தகவல் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இப்பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் தனியாக பிரிவுகள் இல்லை. இந்த பணிகளை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் மூலம் தான் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இப்பணிகளில் உரிய தரம் இல்லை என்று தெரிகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இப்பணிகளை கவனிக்க தனியாக சாலை பாதுகாப்பு பிரிவு ஒன்று ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி சாலைப் பாதுகாப்புப் பிரிவை அமைப்பதற்காக பல்வேறு பிரிவுகளில் 40 புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட சாலைப் பாதுகாப்புப் பிரிவின் கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர்கள், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலை பாதுகாப்பு பிரிவுக்கு சிறப்பு வாய்ந்த பொறியாளர்கள் நியமிக்கபட வேண்டும் என்பதால், சாலை பாதுகாப்பு பணிகளுக்கான உபகரணங்களை தரத்தை பரிசோதிப்பதற்காக போதுமான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் கூட அந்த இடங்களை கண்டறிந்து, அந்த பகுதிகளில் இனிமேல் விபத்து ஏற்படாதவாறு தேவையான சாலை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்ட கரும்புள்ளி பகுதிகள் கண்டறியும் பணி வேகமாக நடந்து வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்ட கரும்புள்ளி பகுதிகள் கண்டறியும் பணி வேகமாக நடந்து வருகிறது.

Related Stories: