×

குருத்வாரா விழாவில் மோடி பேச்சு நாட்டின் ஒற்றுமையை யாரும் சேதப்படுத்த விடக் கூடாது

கட்ச்: ‘நாட்டின் ஒற்றுமையை யாரும் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என குஜராத் குருத்வாரா விழாவில் பிரதமர் மோடி பேசினார். குஜராத்தின் கட்ச்சில் உள்ள லக்பத் சாஹிப் குருத்வாராவில் குருநானக் தேவ் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 23 முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்படும். கடந்த 2001ம் ஆண்டு குஜராத் நிலநடுக்கத்தில் இந்த குருத்வாரா கடுமையாக சேதமடைந்தது. அப்போது, அம்மாநில முதல்வராக இருந்த மோடி, குருத்வாராவை சீரமைத்தார்.

இந்நிலையில், அங்கு நடந்த குருநானக் தேவ் ஜெயந்தி விழாவின் நிறைவு நாளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: சீக்கிய குருக்களின் பங்களிப்பு சமூகம் மற்றும் ஆன்மிகத்தோடு மட்டும் நின்று விடவில்லை. அவர்கள் நமது தேசம், நம்பிக்கை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க பாடுபட்டவர்கள். வெளிநாட்டு அந்நியர்களின் தாக்குதலுக்கு எதிராக தேசத்தை பாதுகாப்பதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள். அவுரங்கசீப்பிற்கு எதிராக குருதேக் பகதூரின் வீரமும், தியாகமும் இந்த நாடு பயங்கரவாதத்திற்கும், மத வெறிக்கும் எதிராக எவ்வாறு போராடியது என்பதை நமக்கு கற்பிக்கிறது.

நாடு சுதந்திரம் பெற வீரத்துடன் போராடிய சீக்கிய சகோதர, சகோதரிகளின் தியாகத்திற்கு ஜாலியன் வாலாபாக் சம்பவமே சாட்சி. ஆனாலும், நமது குருக்கள் நம்மை எச்சரித்த ஆபத்துக்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நமது குருமார்கள் உயிர்த்தியாகம் செய்த கனவுகளை நனவாக்க, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை யாரும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நமது பொறுப்பு. இந்த உறுதிமொழியை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என நம்புகிறேன். நாடு புதிய உச்சத்தை எட்டட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* பாஜ.வை பலப்படுத்த நன்கொடை வேட்டை
முன்னாள் பிரதமரும், மறைந்த பாஜ தலைவருமான வாஜ்பாயின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, பாஜ கட்சிக்கு சிறு தொகையை நன்கொடை அளிக்கும் பிரசாரம் நேற்று தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி ரூ.1000 நன்கொடை வழங்கினார். கட்சியின் பல தலைவர்களும் நன்கொடை வழங்கினர். இந்த நன்கொடை பிரசாரம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி வரை தொடர உள்ளது. இது தொடர்பாக மோடி தனது டிவிட்டரில், ‘‘தேசமே முதலில் என்ற கொள்கையுடன், தன்னலமற்ற சேவைக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த நமது தலைவர்கள் வகுத்த கலாசாரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். பாஜ.வை வலுப்படுத்த உதவுங்கள், தேசத்தை வலுவாக்க உதவுங்கள்,’ என கூறி உள்ளார்.

Tags : Modi ,gurudwara , Modi's speech at the gurudwara should not let anyone damage the unity of the country
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...