×

பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதி மக்களுக்கான குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இதில் தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் பகுதிகளுக்கு தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் காலையிலும், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதிகளுக்கு செம்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜபுரம் விளையாட்டு மைதானத்தில் மதியமும் குறைதீர் முகாம் நடந்தது. தாம்பரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு ஊரக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு இதில் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால், அவர்களுக்காக நாங்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், அவருக்கு கீழ், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், கோரிக்கை மனுக்களுடன் வரும் பொதுமக்களுக்கு முறையாக பதிலளிக்காமல், அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சான்றிதழ் வாங்க வந்தால் கூட, அலட்சிய போக்குடன் பதிலளித்து, அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கவனித்து, கடமை தவறும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவையாற்றாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை. அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் தான் ஏற்படும்.

எனவே, இதுபோன்ற அதிகாரிகள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மேம்பாட்டு நிதியில் தாம்பரம் பகுதியில் புதைவட மின் கேபிள் பதிக்க, கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் செய்யாமல் நிதியை அப்படியே வைத்து விட்டார்கள். கிடப்பில் உள்ள அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மீண்டும் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Palu , Action against officials for failing to discharge charges of harassing the public: DR Palu MP Warning
× RELATED தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு...