உத்தரகாண்ட் தேர்தலுக்கு முன்பாக பாஜக அமைச்சர் திடீர் ராஜினாமா?

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில பாஜக அமைச்சர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2016ம் பாஜகவில் சேர்ந்த உத்தரகாண்டை சேர்ந்த ஹரக் சிங் ராவத், அம்மாநில பாஜக அரசில் அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற ஹரக் சிங் ராவத், கேபினட் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்ததும், நிருபர்களை பார்த்து கண்ணீர் விட்டார். தனது சொந்த தொகுதியில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால், எனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்தப் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று புலம்பினார். ஆனால், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள விவகாரம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories: