×

செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா-தென்ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: புதிய சாதனை படைக்கும் முனைப்பில் கோஹ்லி படை

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பாக்சிங் டேவான நாளை செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக கடந்த 17ம் தேதியே செஞ்சூரியன் சென்ற இந்திய அணியினர் ஒருவாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தென்ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலைக்கு இந்த முறை முடிவு கட்டும் முனைப்பில் இந்திய அணியினர் உள்ளனர். கோஹ்லி தலைமையிலான அணியில் ஆடும் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி உள்ளது.

ரோகித்சர்மா இல்லாத நிலையில் கே.எல்.ராகுலுடன் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். புஜாரா, ரிஷப் பன்ட், தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வர். பார்ம் இழந்து தடுமாறினாலும் ரகானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம். இல்லையெனில் அவருக்கு பதில் ஸ்ேரயாஸ் அய்யர், விகாரிக்கு இடம் கிடைக்கும். ஜடேஜா இல்லாத நிலையில் அஸ்வின் அந்த இடத்தை பிடித்துள்ளார். ஷமி, பும்ரா, முகமது சிராஜ் அல்லது இசாந்த்சர்மா, ஷர்துல் தாகூர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பர். மறுபுறம் தென்ஆப்ரிக்கா டீன் எல்கர் தலைமையில் களம் இறங்குகிறது. டிகாக், பவுமா, மார்க்ரம் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் ரபாடா, லுங்கி நிகிடி வேகத்தில் மிரட்டுவர்.

குறிப்பாக ரபாடா இந்திய வீரர்களுக்கு கடும் சவால் அளிப்பார். இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய உத்தேச அணி: கே.எல்.ராகுல், அகர்வால், புஜாரா, விராட் கோஹ்லி(கே), ரகானே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், அஸ்வின், ஷர்துல் தாகூர் அல்லது விகாரி, பும்ரா, ஷமி, சிராஜ் அல்லது இசாந்த்சர்மா.

தென்ஆப்ரிக்கா: டீன் எல்கர் (கே), மார்க்ரம், கீகன் பீட்டர்சன், வான்டர் டுசென், பவுமா, டிகாக்(வி.கீ),வியான் முல்டர், மகராஜ், ரபாடா, லுங்கி நிடிகி, டுவான் ஆலிவியர்.   தென்ஆப்ரிக்க மண்ணில் இந்திய இதுவரை 7 முறை டெஸ்ட் தொடரில் ஆடி  உள்ளது. இதில் 6முறை  தொடரை இழந்துள்ளது. ஒருமுறை (2010-11) மட்டும் தொடரை  சமனில் முடித்துள்ளது. தென்ஆப்ரிக்கா இந்திய மண்ணில் 7 முறை டெஸ்ட் தொடரில்  ஆடி ஒரு முறைதொடரை கைப்பற்றி உள்ளது. 4முறை இந்தியா  வென்றுள்ளது. 2முறை சமனில் முடிந்துள்ளது.

ரகானே முக்கியமான வீரர்; கே.எல்.ராகுல் பேட்டி
இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல் அளித்த பேட்டி  நானும், அகர்வாலும் வலுவான தொடக்கம் தருவோம் என்று நம்புகிறேன். முதல் 35 ஓவர்களில் விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறேன். 5 பவுலர்களுடன் களம் இறங்குவோம்.. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி அது தான். ரகானே,  விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினம். ரகானே டெஸ்ட் அணியின் மிகவும் முக்கியமான வீரர். முக்கியமான கட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக டெஸ்டிலேயே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் அடித்துள்ளார். இதே போல் விஹாரியும் அணிக்காக நன்றாக ஆடியுள்ளார். அதனால் இதில் முடிவு எடுப்பது கடினம், என்றார்.

செஞ்சூரியன் மைதானம் எப்படி?
செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்ஆப்ரிக்கா 26 டெஸ்ட்டில் ஆடி 21ல் வென்றுள்ளது. 2 தோல்வியை(2000ம் ஆண்டில் இங்கிலாந்து, 2014ல் ஆஸி.க்கு எதிராக)  மட்டுமே சந்தித்துள்ளது. 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இங்கு( 2010 மற்றும் 2018)  2 டெஸ்ட்டில் ஆடி  தோல்வியை சந்தித்துள்ளது.  இங்கு தென்ஆப்ரிக்கா இலங்கைக்கு எதிராக
கடந்தஆண்டு 621 ரன் குவித்ததுதான் அதிகபட்ச ரன். இந்தியா இங்கு 2010ம் ஆண்டில் 459 ரன் எடுத்தது.

இதுவரை நேருக்கு நேர்...
இரு அணிகளும் இருவரை 39 டெஸ்ட் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 14ல் இந்தியாவும், 15ல் தென்ஆப்ரிக்காவும் வென்றுள்ளன.  10 போட்டி டிராவில் முடிந்துள்ளது. தென்ஆப்ரிக்க மண்ணில் இந்தியா இதுவரை 20 டெஸ்ட்டில் விளையாடி 3ல் மட்டுமே வென்றுள்ளது. 10ல் தோல்வி கண்டுள்ளது. 7  போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக இருஅணிகளும்மோதிய 5 டெஸ்ட்டில் இந்தியா 4ல் வென்றுள்ளது.

சச்சின், கும்ப்ளே டாப்
தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 25 டெஸ்ட்டில் ஆடி 7 சதத்துடன் 1741 ரன் குவித்துள்ளார். தென்ஆப்ரிக்கா தரப்பில் காலிஸ் 18 டெஸ்ட்டில் 7 சதத்துடன் 1734 ரன் எடுத்துள்ளார்.  பந்துவீச்சில் கும்ப்ளே  21 டெஸ்ட்டில் 84 விக்கெட்டும். தென்ஆப்ரிக்காவின் ஸ்டெயின் 14 போட்டியில் 65 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.


Tags : India ,South Africa ,Centurion Ground ,Kohli , India-South Africa first Test starts tomorrow at Centurion Ground: Kohli's side set a new record
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...