×

திருவொற்றியூர் விம்கோ நகரில் 140 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக, 140 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. சென்னை திருவொற்றியூர், விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இவற்றை தடுக்க, இங்கு ரயில் நிலையத்தை ஒட்டி சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் சாலையோரம் உள்ள காய்கறி, மளிகை உள்ளிட்ட 140 சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கு சாலையோர வியாபாரிகளும் அப்பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், ‘தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். சாலையோர கடைகளை அகற்ற கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று விம்கோ நகர் ரயில்வே கேட் அருகே சாலையோர கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நேற்று மாலை வரை சாலையோரங்களில் 140 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.


Tags : Wimco, Tiruvottiyur , Removal of 140 occupied shops in Wimco, Tiruvottiyur
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...