×

வாணியம்பாடி- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமத சாலை பணியால் தூசி பறக்கும் அவலம்

* திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்  * அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணியால் சாலைகளில் பறக்கும் தூசியால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வாகனத்தை இயக்கி வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.வாணியம்பாடி- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு இறுதியில்  மேட்டு சக்கர குப்பம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் பூமி பூஜை செய்து சாலைப் பணி துவங்கப்பட்டது. அப்போது சாலைகளில் உள்ள புளிய மரங்கள் அகற்றப்பட்டு இருபுறமும் சாலை விரிவாக்கப் பணி மற்றும் ஆங்காங்கே கல்வெட்டு கால்வாய்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் ஜல்லி கற்கள் பரப்பி உள்ள நிலையில் மற்றொரு பகுதிகளில் ஆங்காங்கே தார்சாலை பணியும் நடைபெற்று உள்ளது. குறிப்பாக பொன்னேரி முதல் வாணியம்பாடி வரை சாலைப் பணி ஓரளவுக்கு நடைபெற்றுள்ளது.

ஆனால் பொன்னேரியில் இருந்து திருப்பத்தூர் வரை சாலை பணிகள் நிறைவு பெறாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் சாலைகளில் மண் தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வாகனங்களை ஓட்டி வருகின்றனர். மேலும் சாலைகளில் ஜல்லி கற்கள் ஆங்காங்கே பரவி உள்ளதால் வாகனங்களை ஓட்டும்போது சறுக்கல் ஏற்பட்டு கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைப் பணி மேற்கொள்ளும் துறை அதிகாரிகள் சாலையில் பெரிய வாகனங்கள் செல்லும் போது அதிக அளவில் தூசி பறப்பதால் காலை வேளையில் மட்டுமே படர்ந்த இடங்களில் தண்ணீரை இறைத்து செல்கின்றனர்.

ஆனால் மதிய வேளையில் அவை காய்ந்து மீண்டும் வாகனங்கள் செல்லும் போது தூசி பறக்கிறது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரியவர் முதல் சிறியவர் வரை தூசியால் திக்குமுக்காடி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே துறை அதிகாரிகள் காலை மதியம் மாலை ஆகிய மூன்று வேளையும் தூசி படர்ந்த இடங்களில் தண்ணீர் இறைக்க வேண்டும் எனவும் சாலைப் பணியை விரைந்து முடிக்க துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vaniyambadi ,Tirupati National Highway , On the Vaniyambadi-Tirupati National Highway Disgrace of flying dust due to delayed road work
× RELATED ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி வந்த...