கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை: சுற்றுலா, ஆன்மீக தலங்களில் குவிந்த மக்கள்..செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி..!!

ராமநாதபுரம்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் வந்துள்ளனர். மேலும் அக்னீ தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று குறித்து நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் கடற்கரையில் பலரும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியின்றி குவிந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா மையமான உதக மண்டலத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளன. கடந்த மாதம் முழுவதும் தொடர் மழை பெய்ததால் தற்போது குளிர்கால பருவம் தொடங்கியிருக்கிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகின்றனர்.

தாவரவியல் பூங்காவில் இயற்கையின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், புல்வெளிகளில் நின்று பல கோணங்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பகலில் இதமான வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் உதகையில் முகாமிட்டு இயற்கையை ரசித்து வருகின்றனர்.

Related Stories: