×

நெருங்கும் தை திருநாள்: உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்..!!

மதுரை: தை மாதம் நடைபெறவுள்ள அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகள் தயாராகிவருகின்றன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தை மாதம் தொடங்கும் இப்போட்டிகள் ஆறு மாதங்கள் வரை பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே காளைகள் தயாராகி வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அவற்றுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. நடை மற்றும் நீச்சல் பயிற்சி, மண் மேடான பகுதிகளில் காளைகளின் கொம்புகளை கொண்டு குத்தும் மண் குத்து பயிற்சி என காளைகளுக்கு தினமும் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்கக்காசு, வெள்ளி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இப்போட்டிகளில் காளைகள் பங்குபெற்று பரிசு பெறுவதை மதுரை மாவட்டத்தில் உள்ள காளையின் உரிமையாளர்கள் கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர். பச்சரிசி, வெள்ளம், தேங்காய், பருத்தி, சுண்டல் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் காளைகளுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற காத்திருப்பதாக காளைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


Tags : Alanganallur Jallikat , Alankanallur Jallikkattu, bulls
× RELATED மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண 75 வெளிநாட்டவர் வருகை..!!