உள்ளாட்சி அமைப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு விவகாரம்!: உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய ஒன்றிய அரசு பரிசீலனை..!!

டெல்லி: உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் நடைபெறும் சட்டப்போராட்டத்தில் ஒடிசா அரசு இணையவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச அரசு மற்றும் ஒன்றிய அரசு இணைந்து உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக தர்மேந்திரா பிரதான் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நகர உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேச அரசுகள் முடிவு செய்தன.

இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பொது பிரிவினருக்கானது என்று அறிவித்த பின் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு செய்ய 3 விதமான சோதனை அளவுகோல்களை பின்பற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: