×

ராமநாதபுரத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மின் கம்பி அறுந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சிறுபோது கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் கம்மாய் நீர் பாசனம் மூலம் மிளகாய், நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த முத்தையா என்ற 65 வயது விவசாயி இன்று அதிகாலை வயல் வேலைக்கு சென்ற போது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் அதனை மிதித்துள்ளார்.

இதில் விவசாயி முத்தையா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வயல் வெளியில் நின்று விவசாயிகள் தொட்டுவிடும் அளவிற்கு உயர் அழுத்த மின் கம்பிகள் இருந்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் சீரமைக்கக்கோரி பலமுறை புகார் கொடுத்தும் அதனை சீரமைக்காமல் அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து உயிரிழந்த விவசாயி முத்தையாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது சம்பவ இடத்தில் காவல் துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Ramanathapuram , electricity
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...