5 மாநில அதிகாரிகளுடன் காணொலியில் ஆலோசனை சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் ஆந்திர, தமிழக அதிகாரிகள் ஆய்வு

திருமலை: சென்னைக்கு கிருஷ்ணா நதி நீதி வழங்குவது குறித்து ஆந்திரா, தமிழக பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று 5 மாநில அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கர்னூல் மாவட்ட நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார். கிருஷ்ணா வாரிய தலைவர் எம்.பி.சிங், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்னைக்கு நீர் வழங்குவது குறித்து நேற்று முன்தினம் காணொலியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெலுங்கு கங்கை திட்ட வரலாற்றில் முதல்முறையாக கடந்தாண்டு அதிகபட்சமாக 8.23 டிஎம்சி ஆந்திரா அரசு சென்னைக்கு வழங்கியதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா இந்தாண்டு ஏற்கனவே 5.5 டிஎம்சி வழங்கியது. பூண்டி நீர்த்தேக்கம் நிரம்புவதால்  ஏப்ரல் வரை தண்ணீர் வழங்க வேண்டாம் என்று ஆந்திராவை கேட்டு கொண்டனர்.

ஆனால், ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு சென்னைக்கு குறைவான தண்ணீரையே வழங்குகிறது. ஆந்திராவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தெலங்கானா  நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மோகன்குமார் தெரிவித்தார். அதற்கு, கர்னூல் நீர்வளத்துறை அதிகாரி முரளிநாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ‘‘கடந்த 1976ம் ஆண்டு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நீர் ஒப்பந்தம், கடந்த 1983ம் ஆண்டு ஆந்திரா, தமிழகம் இடையேயான ஒப்பந்தத்திலும் அபராதம் விதிப்பதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்ய பொட்டிரெட்டிபாடு மேல் ரெகுலேட்டரில் இருந்து ஆந்திர அரசு நூற்றுக்கணக்கான டிஎம்சியை திருப்பி விடுவதாக தெலங்கானா அதிகாரிகள் கூறினர். இந்த கருத்தை கர்னூல் நீர்வளத்துறை அதிகாரி முரளிநாத்  மறுத்தார். மேலும், கிருஷ்ணா நதி வெள்ளநீரை திருப்பி அனுப்பும் விவகாரம் தெலுங்கு கங்கை திட்ட அறிக்கையில் இருக்கிறது. கடலில் கலக்கும் வெள்ளநீரே திருப்பி விடப்பட்டதாக கிருஷ்ணா வாரியத்திடம்  தெளிவுபடுத்தினார். மேலும், சென்னைக்கு பங்கீட்டின்படி தடையின்றி தண்ணீர் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஆந்திரா,  தமிழக பொறியாளர்கள்  தலைமையிலான தொழில்நுட்ப குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழக எல்லை வரை ஜூலை முதல் அக்டோபர் வரை  8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை  4 டிஎம்சியை ஆந்திரா வழங்க வேண்டும். ஆனால், ஸ்ரீசைலத்தில் வெள்ளநீர்  ஜூலையில் வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. சோமசிலா மற்றும் கண்டலேறு அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் அப்பகுதிகளில் விவசாயம் செய்ய போதுமானதாக இல்லை என ஆந்திர முதன்மை பொறியாளர்  தெரிவித்தார். ஸ்ரீசைலத்தில் 840 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்தாலும், 100 நாட்கள் கூட அவை இருப்பதில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் நீர் பங்கீட்டின்படி  5 டிஎம்சி தண்ணீரை சென்னைக்கு வழங்க நாள் ஒன்றுக்கு ஆயிரம் கன அடி வீதம் திறந்து விட்டால் தவிர  ஜூலை, அக்டோபர், ஏப்ரல், ஜனவரி மாதங்களில் தமிழகத்துக்கு 12 டிஎம்சி வழங்க முடியாது.   

இந்நிலையில், சென்னைக்கு 250 நாட்களுக்குள் 12 டிம்சி வழங்குவதற்கு பதிலாக 30 முதல் 40 நாட்களில் வழங்கும் விதமாக ஆந்திர எல்லையில் இருந்து பூண்டி நீர்த்தேக்கம் வரையிலான கால்வாய் கொள்ளளவை ஆயிரம் கன அடியிலிருந்து 2,500 கனடியாகவும், பூண்டி   நீர்த்தேக்க  கொள்ளளவையும் அதிகரிக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகள் கேட்டு கொண்டனர். ஸ்ரீசைலத்தில் இருந்து மேல் மாநிலங்கள் திறக்கும் நீரை, சென்னைக்கு குழாய் பதித்து கொண்டு செல்ல பரிந்துரை செய்ய வேண்டும். சென்னைக்கு தண்ணீர் வழங்கியதற்காக தமிழகம் இன்னும் ரூ.350 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. அதை விடுவிக்க வேண்டும் என ஆந்திர முதன்மை பொறியாளர் முரளிநாத் கேட்டு கொண்டார். இதுஅரசிடம் கூறப்படும் என   தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: