×

சவுராஷ்டிராவை வீழ்த்தி விஜய் ஹசாரே பைனலில் தமிழ்நாடு: இமாச்சலுடன் மோதுகிறது

ஜெய்பூர்: விஜய் ஹசாரே  கோப்பை ஒருநாள் அரையிறுதியில் சவுராஷ்டிரா அணியை 2விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  ‘த்ரில்’ வெற்றிப் பெற்ற தமிழ்நாடு 7வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. ஜெய்பூரில் நடந்த இந்த அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா  அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி, 50ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 310ரன் குவித்தது. அந்த அணியின் ஷெல்டன் ஜாக்சன் 134(125பந்து, 11பவுண்டரி, 4சிக்சர்), வசவதா 57, விஷ்வராஜ் 52, மன்கட்37ரன் விளாசினர்.  தமிழ்நாடு தரப்பில் கேப்டன் விஜய் சங்கர் 4, ரகுபதி சிலம்பரசன் 3, மணிமாறன் சித்தார்த் ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து 311 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் தமிழ்நாடு களமிறங்கியது. காலிறுதியில் சதம் விளாசிய நா.ஜெகதீசன் 0,  விஜய் சங்கர் 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஆனால் பாபா அபரஜித், பாபா இந்தரஜித் இரட்டையர்கள் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர், இந்தரஜித் 50 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 36பந்தில் 31ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.  அதிரடியாக விளையாடி சதம் விளாசிய அபரஜித் 122(124பந்து, 12பவுண்டரி, 3சிக்சர்) ரன்னில் வெளியேறினார். அப்போது தமிழ்நாடு 42.2ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 244ரன் எடுத்திருந்தது. அப்போது களத்தில் இருந்த வாஷிங்டன்  தன் பங்குக்கு சிறப்பாக விளையாட  அணியின் ஸ்கோர் 300யை கடந்தது.

அவர் 61 பந்தில் 70(8பவுண்டரி)ரன்,  முன்னதாக  ஷாருக்கான் 11பந்தில் 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதனையடுத்து  கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது.    முதல் 5 பந்தில் ர.சாய்கிஷோர் 2, சிலம்பரசன் 3  ரன் எடுத்தனர்.   கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் சாய்கிஷோர் அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அதனால் தமிழ்நாடு 8 விக்கெட் இழப்புக்கு 314ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. சவுராஷ்டிரா தரப்பில்  சக்காரியா 4, யுவராஜ் 2, கேப்டன் உனத்கட் ஒரு விக்கெட் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு 7வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.மற்றொரு அரையிறுதியில் இமாச்சல் பிரதேசம் 77ரன் வித்தியாசத்தில்  சர்வீசஸ் அணியை வீழ்த்தி  முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது. ஜெய்பூரில் நாளை நடைபெறும் பைனலில் தமிழ்நாடு-இமாச்சல் பிரதேசம் அணிகள் மோத உள்ளன.


Tags : Tamil Nadu ,Vijay Hazare ,Himachal ,Saurashtra , Saurashtra, Vijay Hazare, Tamil Nadu,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...