உத்தரகாண்ட் காங்கிரஸ் பிரச்னைக்கு தீர்வு ராகுலை சந்தித்த பின் ஹரிஷ் ராவத் மகிழ்ச்சி

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் சமீபத்தில் தனது டிவிட்டர் பதிவில், ‘கட்சித் தலைமை என்னை ஆதரிக்கவில்லை. கட்சியில் சிலர் என்னை செயல்பட விடாமல் கை, கால்களை கட்டிப் போடுகின்றனர்,’ என குற்றம்சாட்டினார். இவரைத் தொடர்ந்து, இந்த மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கடியாலும் தானும் அதிருப்தியில் இருப்பதாக நேற்று முன்தினம் கூறினார். இதனால், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஹரிஷ் ராவத் உள்ளிட்ட தலைவர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, ஹரிஷ் ராவத், கணேஷ் கடியால், கட்சியின் சட்டப்பேரவை தலைவர் பிரிதம் சிங் உள்ளிட்டோர் நேற்று டெல்லி சென்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பின்னர், ஹரிஷ் ராவத் அளித்த பேட்டியில், ‘நான் முழு திருப்தி அடைந்துள்ளேன். உத்தரகாண்ட் தேர்தலில் கட்சி எனது தலைமையில்தான் காங்கிரஸ் போட்டியிடும் என கட்சி தலைமை வாக்குறுதி அளித்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எனது கைகள் இனி கட்டப்பட்டிருக்காது,’ என்று உற்சாகமாக கூறினார்.

Related Stories: