×

லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு காலிஸ்தான் கைவரிசை: பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை

புதுடெல்லி: பஞ்சாபில் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என உளவு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தின் 2வது தளத்தில் நேற்று முன்தினம் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.  நீதிமன்ற கட்டிடத்தில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பின் பின்னணியில் சதி திட்டம் இருப்பதாக ஒன்றிய உளவுதுறைகள் எச்சரித்துள்ளன.  பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கலாம் என்று உளவுத்துறை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் போராட்டத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு பின், பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தானை ஆதரவாளர்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் காலிஸ்தான் தீவிரவாதிகள், லூதியானா குண்டுவெடிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. இது குறித்த ரகசிய தகவல்களை உள்ளூர் அமைப்புகள் மூலமாக பெற்றுள்ளோம். அதனை போலீசாருடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். சிறையில் இருந்து வெளியே சென்றவர்கள், ஜாமீனில் சென்றவர்கள், தப்பித்தவர்களின் பட்டியலை எடுக்க, நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

குண்டு வெடிப்பில் இறந்தவர் தீவிரவாதி
நீதிமன்றத்தில் வெடித்த வெடிகுண்டால், பொதுமக்களி்ல் ஒருவர்தான் இறந்ததாக முதலில் கருதப்பட்டது. ஆனால், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வெடிகுண்டை வைத்தவர்தான்  குண்டு வெடித்து இறந்திருப்பதாக தற்போது உறுதியாகி இருக்கிறது. மேலும், இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் தீவிரவாதியாக மாறி, நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

எல்லையில் சுற்றிய 42 டிரோன்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது கடந்தாண்டு டிரோன் மூலம் வெடிகுண்டு வீசி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான பஞ்சாப் எல்லையில் மட்டுமே, இந்தாண்டு 42 டிரோன்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.  இவற்றின் மூலமாக பாகிஸ்தானில் இருந்து வெடிப்பொருட்கள், சிறிய ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டு தீவிரவாதிகளுக்கு வீசப்படுகின்றன. இவை, பஞ்சாப்பின் அமைதியை சீர்குலைக்க பயன்படுத்தப்படுகிறது.

குருத்வாரா தலைவர் கைது
பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில்  உள்ள குருத்வாராவில் கடந்த 19ம் தேதி தெய்வ அவமதிப்பில் ஈடுபட்டதாக மர்ம நபர் ஒருவரை கும்பல் கொன்றது. இவருடைய உடலில் 30 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக இந்த குருத்வாராவின் தலைவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

தேர்தலை சீர்குலைக்க சதி
இந்தாண்டு ஆகஸ்டில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட குர்முக் சிங் என்பவரிடம் ஏராளமான வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தான் உளவுத்துறை,  காலிஸ்தான் தீவிரவாத குழுக்களிடம் இருந்து அவருக்கு ஆயுதங்கள் கிடைப்பது தெரிய வந்தது. இவர்கள் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை சீர்குலைக்க, தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

Tags : Calistan ,Louthiana , Ludhiana court, bombing, Khalistan handcuffs, Pakistani intelligence
× RELATED கனடா நாட்டவருக்கு விசா கிடையாது: இந்தியா அறிவிப்பு