×

மலையாள இயக்குனர் சேது மாதவன் மரணம்

சென்னை: பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேது மாதவன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் 1950களில் எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சுவாமி, சுந்தர் ராவ் நட்கர்னி, டி.ஆர்.சுந்தரம் ஆகிய இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். 1961ல் வீரவிஜயம் என்ற சிங்கள படத்தின் மூலம் இயக்குனரானார். அசோசியேட் பிக்சர்ஸ் மூலம் டி.இ.வாசுதேவன் இயக்கிய ஞானசுந்தரி (1961) அவரது முதல் மலையாளப் படம். மலையாளத்தில் கமல்ஹாசனை முதலில் சிறுவனாக கண்ணும் காரலும் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு வாலிப வயது கமலையும் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

10 தேசிய விருதுகள், சிறந்த இயக்கத்திற்கான 4 விருதுகள் உள்பட 9 கேரள மாநில விருதுகள் பெற்றுள்ளார். மலையாளத்தில் 60 படங்களை இயக்கினார். சிவகுமார், ராதா நடிப்பில் அவர் இயக்கிய மறுபக்கம் என்ற தமிழ் திரைப்படம், 1991ல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அவரது மறைவுக்கு கமல்ஹாசன், சிவகுமார் உள்பட திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேது மாதவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப்படைப்பாளியும், உயரிய பல விருதுகளை வென்ற இயக்குனருமான கே.எஸ்.சேதுமாதவன் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Sethu Madhavan , Malayalam Director, Sethu Madhavan, Death
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...