×

பெரியார், அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த கொள்கைகளை நிறைவேற்ற உறுதி எடுக்கிறேன்: அம்பேத்கர் சுடர் விருது பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2021 விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், துணை பொது செயலாளர்கள் வன்னியரசு, எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுநர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  அம்பேத்கர் சுடர் விருது முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. இதேபோல பெரியார் ஒளி விருது மதிமுக பொது செயலாளர் வைகோ, காமராசர் கதிர் விருது தமிழ் இலக்கிய ஆர்வலர் நெல்லை கண்ணன், அயோத்திதாசர் ஆதவன் விருது குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமால், காயிதே மில்லத் விருது இந்திய தேசிய லீக் தலைவர் மு.பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் க.ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் கையால் எழுதப்பட்ட படிவத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். மேலும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் சுடர் விருதை பெற்ற பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திருமாவளவன் என்னை தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நேரடியாக என்னிடம் வந்து தெரிவித்தார். திருமாவளவனின் அன்புக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன். அவருக்கும், கட்சியினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த விருதை பெறுவதற்கு எனக்கு சற்றே தயக்கம் இருந்தது. அம்பேத்கர் விருதை பெறுவதற்கு நான் இன்னும் மிகப்பெரிய சாதனைகளை செய்துவிடவில்லை. என் கடமையை தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். திட்டங்களை இன்னும் உருவாக்கித்தர வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். அம்பேத்கர் சுடர் விருதை தொண்டர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். 1987ம் ஆண்டு ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் கவுரவ  வேடத்தில் நடித்தேன். சீர்திருத்தவாதியாக செயல்படக்கூடிய நந்தகுமார் என்ற  பாத்திரத்தை ஏற்று நடித்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  போராடக்கூடியவனான நான் அந்த பாத்திரத்தில் வருவேன்.

இறுதியாக  நான் தாக்கப்படும் போது ‘ஒரு போராளியின் பயணம் இது. அவன் போராடி பெற்ற  பரிசு இது’ என்ற பாடல் வரும். அந்த பாடலை எழுதியது கலைஞர். இந்த விருதை  பெரும் போது அதை தான் நான் நினைத்துப்பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடுவதால் எனக்கு தரும் பரிசாக தான் இதை நான்  நினைத்துப்பார்க்கிறேன். அம்பேத்கருக்கு  பிறகு அவர் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது என்று சொன்னவர் பெரியார்.  ஆதி திராவிடர் நலத்துறை, இடஒதுக்கீடு, வீட்டுவசதி கழகம், மாணவர்களுக்கு இலவச புத்தகம், மாணவர் இல்லங்கள், விடுதிகள், உழவு மாடுகள் வாங்க கடன், தரிசு நிலங்களை வழங்கியது, தீண்டாமை குற்றங்களை கண்காணிக்கக் குழு, அம்பேத்கர் பெயரில் விருது, நூற்றாண்டு விழா, சமத்துவ புரம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இவை அனைத்தையும் உருவாக்கி கொடுத்தவர் தான் நமது தலைவர் கலைஞர். அந்த திராவிட சரித்திரத்தின் தொடர்ச்சியாக தான் இப்போது நடக்கும் ஆட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

எனது தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்ற உடன், விழிப்புணர்வு கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டினேன். அந்த கூட்டத்தில், கல்வி வேலைவாய்ப்பில் பட்டியலின மக்கள் உரிய இடங்களை பெற்றாக வேண்டும். சமூக அமைப்பில் அவர் எந்த சூழலிலும் புறக்கணிக்கப்படக்கூடாது. அவர்கள் வளர்ச்சி சாதியை காரணம் காட்டி தடுக்கப்பட்டுவிடக்கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி என அனைத்து மட்டத்திலும் அவர்கள் வார்த்தெடுக்கப்பட்டாக வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்.   வன்கொடுமை நடக்க கூடாது என்பது தான் திமுக அரசின் கொள்கை. சட்டங்கள் ஏராளமாக தேவைப்படுகிறது. ஒருபக்கம் சட்டங்களும், இன்னொரு பக்கம் பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

திமுக அந்த சட்டங்களை இயற்ற தயாராக இருக்கிறது. சமூக நல்லிணக்கம், சமூக சமநிலை இல்லாத ஒரு மாநிலத்தில் மற்ற வளர்ச்சிகள் அனைத்தும் வீண் முயற்சி தான். பரப்புரை மூலம் உருவாக்க வைகோ மற்றும் திருமாவளவனை போன்றவர்கள் இந்த நாட்டிற்கு தேவை. தந்தை பெரியார், அம்பேத்கர் நமக்கு வகுத்துக்கொடுத்துள்ள கொள்கைகளை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழித்தடத்தில் நிறைவேற்றி காட்டுபவனாக எனது வாழ்க்கை வடிவமைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுக்கிறேன் என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘அனைவராலும் போற்றப்படுகின்ற முதல்வர் இன்று அம்பேத்கர் சுடர் விருதை பெறுவது லட்சோப லட்சம் விசிகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. அதிமுக வெற்றி பெற்றிருந்தால் அது பாஜகவின் ஆட்சியாக தான் இருந்திருக்கும். அதிமுக தமிழ் சமூகத்திற்கு செய்த துரோகத்தால் பாஜ இங்கு வாய் திறந்து பேசுகின்ற துணிச்சலை பெற்றிருக்கிறது. முதல்வர் பெரியாரின் பிள்ளையாகவும்,  அண்ணாவின் பிள்ளையாகவும், கலைஞரின் வார்ப்பாக தான் களத்தில் நிற்கிறார்  என்பதற்கு சான்று தான் பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று  அறிவித்தது’ என்றார்.

Tags : Periyar ,Ambedkar ,Chief Minister ,MK Stalin , Periyar, Ambedkar, Policy, Ambedkar Flame Award, Chief MK Stalin
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...