×

புதுவை கூட்டுறவு நகர வங்கியில் அடகு நகையை கவரிங்காக மாற்றி 400 பவுன் மோசடி: கைதான 2 காசாளர்கள் திடுக் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர் வைத்துச்  சென்ற அடகு நகைகளை கவரிங் நகைகளை மாற்றி 400 பவுன் வரை பலே மோசடியில்  ஈடுபட்டது குறித்து கைதான 2 காசாளர்களும் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம்  தெரிவித்துள்ளனர். புதுச்சேரி, லாஸ்பேட்டையில் நகர கூட்டுறவு வங்கி  கிளையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு தேவைகளுக்காக தங்களது நகைகளை  அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். அதை திருப்ப வந்தபோது நகையை தராமல் வங்கி  ஊழியர் இழுத்தடிப்பு செய்துள்ளார். சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது  சம்பந்தப்பட்ட ஊழியர் மோசடியில் ஈடுபட்ட விபரம் தெரியவரவே வாடிக்கையாளர்கள்  அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம்  நேரடியாக அவர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட  வங்கியில் கடந்த 2 நாட்களாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அங்கு அடகு  வைக்கப்பட்ட அனைத்து நகைகளையும் ஆய்வு செய்தனர். 700க்கும் மேற்பட்ட  பைகளில் வைக்கப்பட்டிருந்தந நகைகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ததில் 28  வாடிக்கையாளர்களின் 80 அடகு நகை பைகளில் கவரிங் நகைகளை வைத்திருந்தது  தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரியே தங்க நகைகளை  எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருப்பது  வெளிச்சத்திற்கு வந்தது. 1.19 கோடி வரை மொத்தம் 400 பவுன் நகைகள் (3  கிலோ வரை) கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்படவே இதுதொடர்பாக கோரிமேடு  காவல் நிலையத்தில் கூட்டுறவு நகர வங்கியின் பரிசோதனை பிரிவு மேலாளரான  (ஆடிட்டர்) அன்பழகன் புகார் அளித்தார். வடக்கு எஸ்பி சுபம்கோஷ்  உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார்,  சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் லாஸ்பேட்டை கிளை தலைமை காசாளரான கணேசன், உதவி காசாளர் விஜயகுமார் ஆகியோர் மீது மோசடி, திருட்டு  உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் வழக்குபதிவு செய்தனர்.

பின்னர்  வங்கி அலுவலகம் மற்றும் தங்களது வீட்டில் பதுங்கியிருந்த 2 பேரையும் உடனே  கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து  விசாரித்தனர்.  அப்போது மோசடி நகைகளை சேட்டு கடைகளில் ஆங்காங்கே அடகு  வைத்திருந்தது கண்டுபிடித்த போலீசார், அவற்றை மீட்டனர். மொத்தம் 400 பவுன் நகைகளையும் மீட்ட காவல்துறையினர், 2 பேரையும் கோவிட் பரிசோதனைக்குபின்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக மோசடி  சம்பவம் குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல் கிடைத்தது.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- லாஸ்பேட்டை கூட்டுறவு நகர  வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்துச் சென்ற நகைகளை அவர்கள்  தங்களுக்கு தேவைப்படும்போது எடுத்து அதற்கு மாற்றாக போலி (கவரிங்) நகைகளை  மாற்றி வைத்துள்ளனர். பின்னர் ஒரிஜினல் நகைகளை வெளியே அடகு வைத்து  அதன்மூலம் கிடைத்த பணத்தை தங்களுக்கு சொந்த வருமானம் தேடி பயன்படுத்தி  வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம்முதல் இதுபோன்ற மோசடிகள் அங்கு  அரங்கேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நகையின் உரிமையாளர் வங்கிக்கு வந்து  நகையை மீட்க வரும்போது 2 மணி நேரம் கழித்து வாருங்கள்... அல்லது 2 நாள்  கழித்து வாருங்கள்..., சர்வர் பிராபளம் என்று ஏதாவது சாக்குபோக்கு அல்லது  அறிவுரை கூறி அனுப்பி வந்துள்ளனர். அவர்கள் மீண்டும் வருவதற்குள் வெளியே  சேட்டு கடையில் வைத்திருந்த ஒரிஜனல் நகைகளை மீட்டு வந்து  வாடிக்கையாளர்களிடம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக மற்றொரு  வாடிக்கையாளரின் ஒரிஜினல் நகையை எடுத்து பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு 80  அடகு பைகளில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று அடகு வைத்து நூதன மோசடி,  திருட்டில் கூட்டாக இருவரும் செயல்பட்டுள்ளனர். எந்த புகாரும் வராத  நிலையில் வங்கி நிர்வாகத்திற்கும் அவர்கள் மீது சந்தேகம் எழவில்லை.  இறுதியாக வாடிக்கையாளர் ஒருவர் அவசரமாக தனது நகைளை திருப்ப மேற்கண்ட  வங்கிக்கு வந்தபோதுதான் முழுபூசணிக்காய் வெளியே வந்ததுபோல் அங்குநடந்த பலே  மோசடி வெளிச்சத்திற்கு வந்த தகவல் அம்பலமாகி உள்ளது.

இருப்பினும் இந்த  மோசடிக்கு வேறு நபர்கள் யாராவது வங்கியில் துணையாக இருந்தார்களா? என்பது  தொடர்பாகவும் கோரிமேடு போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து  வருகின்றனர். இந்த மோசடி காரணமாக கூட்டுறவு நகர வங்கியில் நகைகளை அடமானம்  வைத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அங்கு தாங்கள் அடகு  வைத்துள்ள நகைகளை மீட்பதற்கு பொதுமக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.  இதனால் சம்பந்தப்பட்ட வங்கியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags : New Cooperative City Bank , pudhucherry , Cooperative Bank, fraud
× RELATED புதுவை கூட்டுறவு நகர வங்கியில் அடகு...