மம்தாவின் பாதுகாவலர்கள் துப்பாக்கி கொள்ளை: அசாம் ரயிலில் துணிகரம்

கொல்கத்தா: அசாமில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்த ரயிலில் மம்தாவின் பாதுகாவலர்கள் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கொள்ளை போன வழக்கில் ஒருவன் கைது செய்யப்பட்டான். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு போலீசார், அசாமில் இருந்து  ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். ​​நியூ கூச் பெஹார் ரயில் நிலையம் அருகே அதிகாலை 4:45 மணியளவில் ரயில் சென்றபோது பாதுகாப்பு போலீசாரின் துப்பாக்கிகள், தோட்டாக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டவுன் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வரின் பாதுகாப்பு போலீசார் வந்து கொண்டிருந்தனர். முன்னதாக கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி அசாமில் காமாக்யா கோயிலுக்கு சென்றார். அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ரயிலில் போலீசார் சென்றிருந்தனர். முதல்வர் அவரது பயணத்தை முடித்துக் கொண்டு கொல்கத்தா திரும்பிவிட்டார். ஆனால், பாதுகாப்பு போலீசார் அசாமில் இருந்து ரயிலில் திரும்பினர். அப்போது அவர்கள் தங்களது ஆயுதங்களை (துப்பாக்கி, தோட்டா) ஒரு பையில் வைத்திருந்தனர்.

இரவு நேரத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள், பெட்டியில் இருந்த இரண்டு குளோக் பிஸ்டல் துப்பாக்கி, 20 தோட்டாக்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக தபன் பர்மன் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவரிடம் இருந்து ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த பை, பணம் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டன. மேலும், கூச் பெஹார் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள புதருக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: