×

குல்தீப் யாதவ் பற்றிய எனது கருத்து அஸ்வினை காயப்படுத்தி இருந்தால் மகிழ்ச்சி தான்: மாஜி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், 2018-19 ம் ஆண்டில் தமக்கு காயம் ஏற்பட்ட போது சிறப்பாக பந்துவீச முடியவில்லை. அப்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்து தம்மை மிகவும் மனதளவில் காயப்படுத்தியது. குல்தீப் தான் இனி சிறந்த பந்துவீச்சாளர், அஸ்வினின் காலம் முடிந்துவிட்டது என்று ரவிசாஸ்திரி கூறியது என்னை பஸ்சுக்கு கீழே தள்ளி ஏற்றியதுபோல் இருந்ததாக கூறினார்.

இதற்கு பதில் அளித்து ரவிசாஸ்திரி அளித்துள்ள பேட்டி: 2018ம் ஆண்டில் அஸ்வினின் உடல் தகுதி சரியாக இல்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். குல்தீப் அப்போது அஸ்வினை விட சிறப்பாக பந்துவீசினார். அதனால் தான் நான் குல்தீப்பை பாராட்டினேன். குல்தீப் பற்றிய எனது கருத்து அஸ்வினை காயப்படுத்தியிருந்தால், அதனை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரை வேறு ஏதாவது செய்ய வைத்தது. பேருந்துக்கு அடியில் அஸ்வினை தள்ளிவிட்டேன் தான்.

ஆனால் பேருந்து ஓட்டுனரை மூன்று அடிக்கு முன்னாலே நிறுத்த சொல்லிவிட்டேன். இதனால் அஸ்வின் நொறுங்க மாட்டார். நான் அப்படி சொல்லியதால் தான் அஸ்வின் இன்று தனது உடல் தகுதியை மேம்படுத்தி உலகின் தலைச்சிறந்த பந்துவீச்சாளராக உள்ளார். நீங்களே 3 ஆண்டுக்கு முன்னால் இருந்த அஸ்வினையும் இப்போதுள்ள அஸ்வினையும் பாருங்கள். உண்மையை சொல்லி அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதே எனது பணி, என்றார். ஐபிஎல்லில் சொந்த நாட்டின் முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை.

இந்திய அணியின் பயிற்சியாளர், உடற்பயிற்சியாளர், மசாஜ் செய்பவர் கூட ஐபிஎல்லில் பணியாற்ற முடியாது. ஆனால் வெளிநாட்டவருக்கு இந்த விதி பொருந்தாது. இதில் முரண்பாடு உள்ளது. மற்றொரு வெளிநாட்டு அணியின் பயிற்சியாளர் ஐபிஎல் அணியில் வந்து பயிற்சி அளிக்கலாம். சொந்த நாட்டு வீரர்களுக்கு அனுமதியில்லை. பயிற்சியாளராக இருந்த நான் ஐபிஎல்லில் வர்ணணையாளர் பணியை கூட செய்ய முடியாது. டெல்லி பயிற்சியாளராக இருக்கும் ரிக்கிபாண்டிங், தனது நாட்டில் டிவி நிகழ்ச்சிகளை நடத்தலாம், டெல்லி வீரர்கள் பற்றி விவாதிக்கலாம். இந்த விதி ஒரு முட்டாள் தனம். இந்த விதியை குப்பையில் போட வேண்டும், என்றார்.

Tags : Kuldeep Yadav ,Aswin ,Ravi Shastri , I would be happy if my comment about Kuldeep Yadav hurt Aswin: Interview with former coach Ravi Shastri
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்