சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் 32 பள்ளிகளின் கட்டிடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும்; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் 32 பள்ளிகளின் கட்டிடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும். மேலும் 40 பள்ளிகளின் கட்டிடத்தை கட்டிட அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நெல்லை மாநகரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன் மற்றும் சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இசக்கி பிரகாஷ், சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு  செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலும் குழு அமைத்து ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 281 பள்ளிகளின் சுற்று சுவர், கழிப்பறை, வகுப்பறைகள் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரி பாரதிதாசன், உதவி கல்வி அலுவலர் முனியன் மற்றும் செயற்பொறியாளர், தலைமையாசிரியர் மற்றும் அந்த அந்த பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கடந்த திங்கள் கிழமை முதல் மூன்று நாட்களாக ஆய்வு செய்தனர்.

இதையடுத்து இந்த குழுக்கள் ஆய்வு செய்து  அறிக்கையை கட்டிடங்கள் துறையிடம் சமர்பித்துள்ளனர். அதில் 32 பள்ளிகளின் கட்டிடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என்றும், மேலும் 40 பள்ளிகளின் பட்டியலை கட்டிடங்கள் துறையிடம் கொடுத்து அந்த கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து கட்டிட துறை அதிகாரிகள் 72 பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 72 பள்ளிகளின் கட்டிடங்கள் இடிக்கப்படுமா? அல்லது 32 பள்ளிகளின் கட்டிடம் இடிக்க வேண்டுமா என்று இரண்டு நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கின்றனர். அதன்பிறகு சென்னை மாநகராட்சியில் எத்தனை பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் என்ற தகவல் தெரிய வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: