மதமாற்ற தடை மசோதா கர்நாடகாவில் நிறைவேற்றம்: எதிர்கட்சிகள் கடும் வாக்குவாதம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மதமாற்ற தடை சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் செய்வதை தடுக்க பெலகாவியில் நடந்து வரும் பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் ‘‘கர்நாடக மத சுதந்திர பாதுகாப்பு உரிமை சட்டம்-2021’’ என்ற பெயரில் சட்ட மசோதா தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 20ம் தேதி முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி சட்டப்பேரவையில் இது தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விவாதம், பேரவையில் நேற்று தொடங்கியது. அப்போது பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதா, கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பினரின் உரிமையை பறிக்கும் நோக்கத்தில் கொண்டு வரவில்லை. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, காதல் என்ற பெயரில் மதம் மாற்றுவது ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ெகாண்டு வரப்பட்டுள்ளது,’ என்றார். இதைத் தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சர் மாதுசாமி, ‘மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சி, காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது எடுக்கப்பட்டது.

கடந்த 2014, 2016ம் ஆண்டுகளில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை தயாரிக்கும்படி மாநில சட்ட ஆணையத்திற்கு அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ஆஞ்சநேயா கடிதம் எழுதியுள்ளார். நீங்கள் காட்டிய வழியை தான் நாங்கள் பின்பற்றி உள்ேளாம்’ என்றார். இதற்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதேபோல், மஜத சார்பில் எச்.டி.ரேவண்ணா, எச்.கே.குமாரசாமி, பண்டெப்பா காஷம்பூர் ஆகியோரும் பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர் என்.மகேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், மசோதா மீது சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்தி, மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

Related Stories: